Sunday 20 April 2014

PIRAVAATHA NERI

பிறவாத நெறி ஒன்று இருக்கிறது என்பதைக் கேட்ட புலத்தியன் விடுவானா?

அடுத்து அகத்தியரைக் கேட்கிறான், "பிறவாத நெறி காட்டி அமிர்தம் ஈந்து மாறாத அடிமை படைத்தி  ஆளுமென்று"

அகத்தியர் கூறுகிறார்,

"மகத்தான ரகசியமடா ஞான மார்க்கம், இணங்கியதோர் அந்தரங்கமான சூட்சம், ஏகாந்த சுட்சமென்ற கதையைக் கேளு, குணங் குவிய ஆதியந்தக் குறியை நன்றாய்க், கூர்மையுடன் சொல்லுகிறோம் குணமாய்க் கேளு"

"தெரப்பா தேடியறியாத வஸ்து, தெளிவான வெளியதுதான் பரமதாகும், கேளப்பா பரமான வஸ்து தன்னைக் கிருபையுடன் அறிவதுவே ஆதி அந்தம்"

"பாரப்பா அடிமுடியும் தேடிப்போன, பதிவான மாலவனுங் காணாரென்று, நேரப்பா தேவ முறைத்திட்ட செய்தி, நீள் புவியில் யாவர்க்கும் உரைத்திட்ட செய்தி"

"யாரப்பா அறிவார்கள் பர சொரூபம், அந்தரங்கமான சிவ ரூபம் ரூபம்"

"கேளப்பா பராபரமாய் நின்ற சோதிக், கிருபையுடன் சிவன் படைக்க நினைத்த போது, மாளப்ப வல்ல பரந்தனிலே தான், வளமான சிவமதுதான் உண்டாச்சப்பா"

ஐய அகத்திய மாமுனியே, என் குருவே, இந்த உலகத்தில் ரிஷி, முனிவர், சித்தர்ரெல்லாம்  தவம் பெற்ற பெரியோர் மகிமையைச் சொன்னீர்கள் மகிழ்ந்தேன். அடியேனையும் இனி பிறக்காமல் இருக்கும் வழியைச் சொல்லி அருள வேண்டும் என்று கேட்க அகத்தியர் கூறுகிறார்,

"மகத்தான ரகசியமான மார்க்கம் ஞானமார்க்கம். அது ஒன்றோடு ஒன்று இணைந்து நிற்கின்ற அந்தரங்கமான சூட்சம். எங்கும் நிறைந்து இருக்கின்ற ஏகாந்தமான ரகசியத்தை அதன் கதையை உன் மனம் தெளிய ஆதி அந்தக் குறிப்பை கூர்மையுடன் சொல்லுகிறோம் நன்றாய் தெரிந்து கொள்ளு."

"தேவாதி தேவர்கள் வேதமுதல் சமயத்தோர் அறியமுடியாத பொருள் ஒன்று உண்டு. அதுதான் வெட்ட வெளி. அந்த வெட்ட வெளிக்குப் பெயர்தான் பரம் என்று சொல்லுவது. இந்த வெட்ட வெளி ரகசியத்தை முழுவதும் அறிவதுதான் ஆதி அந்த விளக்கம் என்று சொல்லப்படுவது."

வெட்ட வெளியின் ரகசியத்தை அறிவதுதான் ஆதி அந்தம் என்பது. இந்த வெட்ட வெளியை சிவ பெருமான் எனக் கூறி அவர் முடியை அறிவதற்கு பிரம்மா அன்னபட்சி உருவம் கொண்டு மேலும் மேலும் பறந்தார் எனவும் சிவனின் அடியைக் காண விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து கீழே கீழே சென்றார் எனவும் இருவரும் அடியையும் முடியையும் காணமுடியவில்லை.

அந்த வெட்ட வெளியில் ஒரு நிறம் தெரிந்தது. அந்த நிறத்திற்கு சிவ ரூபம் என்று பெயர் வைத்தனர். சிவ ரூபம் என்றால் என்ன பொருள்? நிறம்?

அகத்தியர் வெட்ட வெளியில் தெரிந்த காட்சி ஜோதி என்றார். அதையே சிவன் என்று குறிப்பிடுகிறார். ஆகவே சிவன் எனபது வெட்ட வெளியில் காணும் ஜோதி. சிவன்தான் ஜோதி, ஜோதிதான் சிவன்.

ஜோதி என்றால் என்ன? ஒளியின் திரட்சி நிலைக்கு சுடர் என்று பெயர். ஒளியின் படர்ந்த நிலைக்கு ஜோதி எனபது பெயர். விளக்கு திரியில் எரியும் நெருப்பு சுடர், அறையில் உள்ள பிரகாசமே ஜோதி.

ஆதியிலே வெட்ட வெளியிலே தோன்றிய பிரகாசமே ஜோதி என்று அழைக்கப் பட்டது. அதையே இறைவனாக சித்தர்கள் வழி படுகிறார்கள். வெட்ட வெளியான ஜோதியைத்தான் அனைத்து சித்தர்களும் வணங்கினார்கள், போற்றினார்கள். சமீப காலத்தில் வாழ்ந்த வள்ளலாரும் அதே ஜோதியைத்தான் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை  என்று வணங்கினார்கள். அதைத்தான் வாழையடி வாழையாக வந்த அனைத்து சித்தர்களும் வணங்கினார்கள்.

- தவயோகி தங்கராசன் அடிகளாரின் 'அண்டமும் பிண்டமும்'